ஞாயிறு, 3 ஜனவரி, 2010

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்டம்:தமிழக அரசு ரூ. 23 கோடி மானியம் அனுமதி


தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நாளை நடக்கிறது. இதில் தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டத்திற்கு இரண்டாம் கட்ட நிதியாக அரசு 23 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. இதனால் பணிகளை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் நாளை காலை 10 மணிக்கு மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது. திருச்செந்தூர் இடைத்தேர்தல் காரணமாக ஒரு மாதத்திற்கு மேல் மாநகராட்சி கூட்டம் நடக்காமல் இருந்தது. இதனால் கூடுதல் தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் இடம் பெற்றுள்ளது.


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தற்போது பாதாள சாக்கடை திட்டம் மூன்று பேக்கேஜ்களாக நடந்து வருகிறது.பாதாள சாக்கடை திட்டம் தூத்துக்குடியில் கடந்த 2003ம் ஆண்டு அனுமதி அளிக்கும் போது 46 கோடியே 40 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆண்டொன்றுக்கு இதன் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செலவுகள் 91 லட்சம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு திட்ட மதிப்பீடு 68 கோடியே 62 லட்சமாக உயர்ந்தது. மீண்டும் தற்போது 80 கோடி ரூபாய் செலவாகும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.


இதனை தொடர்ந்து தமிழக அரசும் பாதாள சாக்கடை திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவாக செயல்படுத்தும் பொருட்டு இரண்டாம் கட்ட மானியமாக தற்போது 23 கோடி ரூபாய் அரசு அனுமதியளித்துள்ளது. மொத்தம் 80 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ள தூத்துக்குடி பாதாள சாக்கடை திட்டத்தில் 23 கோடி ரூபாய் மக்கள் பங்களிப்பும், தமிழ்நாடு வளர்ச்சி நிதியம் கடன் 24 கோடியும் பெறப்படுகிறது. மீதமுள்ள 33 கோடி ரூபாய் தமிழக அரசு மானியமாக அனுமதித்துள்ளது. தற்போது திருத்திய திட்ட மதிப்பீடு குறித்து நாளை நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது. அரசு தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்த திட்டத்திற்கு பெரிய அளவில் நிதி அனுமதித்திருப்பதால் அரசுக்கு பாராட்டும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக